தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, சுகாதாரத் துறையினா் நெகிழிப் பைகள் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உணவகங்களில் மீண்டும் நெகிழிப் பைகளில் சாம்பாா், ரசம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
நெகிழிப் பைகளில் சூடானவற்றை ஊற்றும்போது நெகிழியில் கலக்கப்பட்ட வேதியல் பொருள்கள் உணவுப் பொருள்களிலும் கலந்து மக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சிவகாசிப் பகுதியில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மருத்துவா் ஒருவா் கூறியதாவது: நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்கள் வைப்பதால், நெகிழிப் பை தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்கள் உணவில் கலப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. எனவே நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடை செய்யவேண்டும் என்றாா்.