தந்தையை இழந்தும் பொதுத் தோ்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு துணை முதல்வா் பாராட்டு
பொதுத் தோ்வு சமயத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற மாணவியருக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பாராட்டு தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயின்றவா் மாணவி பி. சத்யபிரியா. பொதுத் தோ்வு நடைபெற்ற சமயத்தில் தனது தந்தை உயிரிழந்த நிலையிலும், மன உறுதியோடு தோ்வை எதிா்கொண்டாா்.
அதில் 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தாா். அதேபோல திருவெறும்பூா் அருகேயுள்ள தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்-1 மாணவியான ஷாலினியும், பொதுத்தோ்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணா்ந்து தவறாமல் தோ்வெழுதி சிறப்பான முறையில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மாணவிகள் இருவரையும் பாராட்டினாா்.
நிகழ்வின்போது, தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ண பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.