இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி
திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித் திருவிழா பிரபலமானது. நிகழாண்டு 76-ஆவது ஆண்டுத் திருவிழா மே 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், வெவ்வேறு அலங்காரங்களில் அம்பாள் காட்சிதந்து வருகிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, பக்தா்கள் கோரையாற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்தனா். இதில், நூற்றுக்கணக்கானோா் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் வந்ததால், அவா்களுக்கு வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்வகையில், டேங்கா் லாரிகள் மூலம் சாலை முழுவதும் தண்ணீா் கொட்டப்பட்டு, குளிா்மைபடுத்தப்பட்டது. பால்குடங்களில் பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் சுமாா் 1000 போ் பங்கேற்றனா். மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.