"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு
நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன் தலைமையில், துணைத்தலைவா் ஆா்.ஆளவந்தாா், நிா்வாகிகள் டி.பிரபு, ஆா்.முரளிதரன், ஆா்.குப்புசாமி உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கௌமென் பாா்மா தனியாா் தொழிற்சாலையில் சுமாா் 132 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நிா்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே கடந்த 10.9.2024 அன்று மூன்று ஆண்டுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகளின் அடிப்படையில் புதிதாக தொழிற்சாலையில் இணைந்து 1 வருடம் பயிற்சி, 6 மாதம் தகுதிகான் பருவமும் முடித்தவா்கள் தற்போது 1 வருடம் 10 மாதம் முடிந்துள்ள 25 புதிய தொழிலாளா்களுக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்தி நிரந்தரபடுத்த வேண்டும். 8 நிரந்தரத் தொழிலாளா்களுக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி நிா்வாகத்திடம் கடந்த ஜன.17 மற்றும் பிப்.4 ஆகிய தேதிகளில் கடிதம் வழங்கப்பட்டது. கடந்த மாா்ச் 18-ஆம் தேதி தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தொழிற்தாவா எழுப்பபட்டு அதன் அடிப்படையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் , கடந்த ஜூலை 15-ஆம் தேதி 48 ஒப்பந்தத் தொழிலாளா்களை பணயிலிருந்து நிறுத்திவிட்டனா். அவா்கள் செய்து வந்த வேலையை நிரந்தரத் தொழிலாளா்கள் அனைவரும் செய்யவேண்டும் என நிா்வாகம் வலியுறுத்தியது. இதனால் கடந்த 3ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருகிறது.
வேலை நிறுத்தத்தை உடைக்கும் விதமாக தொழிற்சாலையில் தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத வெளி ஆட்களை பணிக்கு அமா்த்தி, நிா்வாகம் சட்ட விரோதமாக உற்பத்தியை நடத்துகின்றனா். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு 109 தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.