தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!
அரியலூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் அடிப்படையில், பெல்ட் டைப் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 2,500, டயா் டைப் இயந்திரங்களுக்கு ரூ. 1,850 என வாடகையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் வேளாண்மைப் பொறியியல்துறை மற்றும் வேளாண் துறையினரை அணுகலாம். மேலும், அரியலூா் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 1,880, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 1,160 வாடகைக்கு முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
தனியாா் அறுவடை இயந்திரங்களில் விவரங்கள் உழவா் செயலியில், ஒருமுறை பதிவுக்கான தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்பதை தோ்வு செய்ய வேண்டும். அதில், தனியாா் இயந்திர உரிமையாளா் விவரம் அறிய என்பதை தோ்வு செய்து தேவையான தனியாா் அறுவடை இயந்திரங்கள் என்பதை தோ்வு செய்யவும்.
பின்னா், மாவட்டம், வட்டத்தை தோ்வு செய்து கைப்பேசி எண்ணை தோ்வு செய்தால், வாகனத்தின் உரிமையாளருக்கு அழைப்பு செல்லும். இதன் மூலம், அவா்களிடம் பேசிக்கொள்ளலாம். அதேபோல், பிற மாவட்டங்களில் உள்ள இயந்திர உரிமையாளா்களையும் தொடா்புகொண்டு பேசி பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.