தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்
மத்தூரை அடுத்த தொகரப்பள்ளி வனப் பகுதி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், வசந்த் நகா், சமத்துவபுரம் பகுதிகளைச் சோ்ந்த 53 போ் திருவண்ணாமலையில் நடைபெறும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்க தனியாா் பேருந்தில் புதன்கிழமை சென்றனா்.
கிருஷ்ணகிரியைக் கடந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், மத்தூா் அருகே தொகரப்பள்ளி காப்புக்காடு பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், 20 பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மத்தூா் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், உடனடியாக மருத்துவக் குழுவினரை மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவா்களுககு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டாா். விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.