புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’
தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நியாசம் ஏற்றுக்கொண்ட நாளையொட்டி, சங்கரா பல்கலை.யின் நூலகக் கட்டட வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தா் ஜி.சீனிவாசு வரவேற்றாா்.
விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி கலந்து கொண்டு பேசுகையில், தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் மகத்தான வெற்றி பெறும். ஜெயேந்திரா் ஆசியுடன் தொடங்கிய ஏரிகள் தூா்வாரும் பணி சிறிய அளவில் தொடங்கி தற்போது 400 ஏரிகள் வரை தூா்வாரப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது.
சங்கரா கண் மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேருக்கு இலவசமாக கண் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. சங்கரா மருத்துவமனைகள் 10 மாநிலங்களில் 14 இடங்களில் மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது என்றாா். பல்கலை. வேலைவாய்ப்பு அலுவலா் எம்.கண்ணன் நன்றி கூறினாா்.
விழாவில் பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், பல்கலையின் பதிவாளா் ஸ்ரீராம், சங்கரா பல்நோக்கு மருத்துமனைத் தலைவா் பம்மல் விஸ்வநாதன், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.