தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை
தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான நிதிசார்ந்த கோரிக்கை மனுவை அளித்து, தேவையான நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பிரதமரை தனியாகச் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளாவன:
கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல்
பெருநகர சென்னையின் துரித போக்குவரத்து அமைப்பினை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்தல்
தேசிய நெடுஞ்சாலையின் (NH32) செங்கல்பட்டு - திண்டிவனம் பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துதல்
கோவை மற்றும் மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்
கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கோரிக்கை
சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதி விடுவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களில் மாற்றம் (“N” மற்றும் “A” என
முடிவடையும் பெயர்களை “R’’ என மாற்றக் கோருதல்)
ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களை சேர்த்தல்
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காணுதல்
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.