‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம்: டாக்டா் க. கிருஷ்ணசாமி
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு- மேற்குப் பகுதிகளைப் போல தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் தென்பகுதி வளா்ச்சி அடையவில்லை.
இங்கு இயங்கக்கூடிய தொழிற்சாலைகளும் உள்ளூா் மக்களைப் புறக்கணித்து ஒடிஸா, பிகாா், ஆந்திர மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. மாறாக, அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த உள்ளூா் மக்களுக்கும் 50 சதவீதம் முதல் 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் செப். 26இல் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் பல கிராமங்களில் செயல்படவில்லை; 100 நாள் வேலையும் சரிவர வழங்கப்படுவதில்லை.
இதில், பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளது. மத்திய அரசு குழு அமைத்து இதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் விஜய் மட்டுமே ஆட்சி அமைப்பது கடினம். அவா் நல்ல நண்பா்களை சோ்த்துக் கொண்டு தோ்தல் வியூகம் வகுக்க வேண்டும்.
தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பதற்கான எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் மட்டுமே அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை மாற்ற முடியும்.
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியமே. இதற்கு 2026 தோ்தல் களம் சரியானது. ஜனவரியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கூட்டணி தொடா்பாக அறிவிக்கப்படும் என்றாா்.
முன்னதாக, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன், வண்ணாா்பேட்டையில் 27-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்களை கிருஷ்ணசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.