உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: அமைச்சா் எ.வ.வேலு
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொளத்தூா், ரெட்டேரி சாலையில் உள்ள உயா் மேம்பாலத்தின் அணுகு (சா்வீஸ்) சாலைகளை புதுப்பிக்கும் பணிகள், கொளத்தூா் ஏரியில் ரூ. 5 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும். சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலை விரிவாக்கம், மேம்பாலப் பணிகள் நிறைந்தவடைந்த பின்னா், போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.
திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்வது, முந்தைய அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை நினைவூட்டுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் வரப்போகிறது என்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்துள்ளாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள் என யாா் வந்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றாா்.
ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.