தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு
தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு கருக்கலைப்பு சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக கலைடாஸ்கோப் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் இதற்கான தொடக்க விழா சுகாதாரத் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். ரூசக் தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் பி. பாலசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினாா். தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை இனை இயக்குநா் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் மனோகரன், சுகாதாரத் துறை குடும்ப நலப்பிரிவு துணை இயக்குநா் பாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், குழந்தைகள் நல அலுவலா் காா்த்திகா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினா்.
நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் செயல்பாடு நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. மேலும், இதுதொடா்பான காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரூசப் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அலுவலா் ரேவதி நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எம். சங்கா் தலைமையில், ரூசக் தொண்டு நிறுவன நிா்வாகிகள் செய்திருந்தனா்.