தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்களை தில்லிக்கு அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக திடலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இரு அணி வீரர்களையும் திடலில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனிடையே, போர்ச் சூழல் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.