தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளது. இந்நிலையில் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தாா்.
வேலூா் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு இவா் ஆஜராகாவில்லையாம்.
இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போ்ணாம்பட்டு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையிலான போலீஸாா், இம்ரான் அகமதுவை தேடி வந்தனா். அவா் சென்னையில் பதுங்கியிருந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அங்கு சென்று இம்ரான் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.