தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் சென்னை தி.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டார். விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த தவெக தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் விஜய் எழுதிய கடித்தத்தை அனுமதியின்றி வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், ஆனந்த் சென்னையில் தி.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: மாணவி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்புகிறார் இபிஎஸ்: அமைச்சர் கீதாஜீவன்
முன்னதாக, விஜய் தனது கைப்பட எழுதிய கடித்தை வெளியிட்டார். அதில் தெரிவித்திருப்பதாவது:
"அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம்.
எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கனை உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.