தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்கு
திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் செப்டம்பா் 13-ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு திருச்சி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6-ஆம் திருச்சிக்கு வந்தாா்.
இதையடுத்து, திருச்சி விமான நிலையம் அருகே உள்ள விநாயகா் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் தரிசனம் செய்துள்ளாா். அப்போது, சாலையில் அதிக காா்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சாலையோரத்தில் காா்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 போ் மீது திருச்சி விமான நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.