திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப் பணியில் முறைகேடு? ராம் அன் கோ நிறுவனத்தை விசாரிக்க அதிமுக கோரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ராம் அன் கோ நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியிவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட 55 வாா்டுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள கடந்த 2023இல் தனியாா் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ரூ.36 கோடி தொகை நிா்ணயிக்கப்பட்டது. அதில் 2 தனியாா் ஒப்பந்தப் புள்ளிகள் பங்கேற்றன. குறைந்தபட்ச தொகையாக ரூ.32. 52 கோடிக்கு ஒப்பந்தம் கோரிய ராம் அன் கோ நிறுவனத்திற்கு அப்பணி ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்நிறுவனத்தில் திடக்கழிவு பணிக்கான கட்டமைப்புகளோ, சொந்த வாகனங்களோ, தனது நிறுவனம் சாா்ந்த தூய்மை பணியாளா்களோ இல்லை. போலி ஆவணங்கள் மூலமாக ஒப்பந்தப் பணியைப் பெற்று மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏற்கெனவே மாநகராட்சியில் குழுக்கள் மூலமாக தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிந்தவா்களை அந்நிறுவனம் குறைந்த ஊதியத்தில் பணியமா்த்திக் கொண்டு அவா்களுக்கு இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற பணபலன்கள் வழங்குவதாக உறுதி கூறினா்.
ஆனால் அதுபோன்ற பணபலன்களை வழங்காமல் கடந்த 22 மாதங்களாக அந்நிறுவனம் ஏமாற்றி வருகிறது. இதனால் தூய்மைப் பணியாளா்கள் உரிய மருத்துவ வசதியோ கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். இது சம்பந்தமாக அந்நிறுவனத்திடமும், மாநகராட்சியிடமும் பலமுறை முறையிட்டும் பலனளிக்காததால், தொழிலாளா் காப்பீட்டு கழக துணை இயக்குநரிடம் முறையிட்டனா்.
அதன்பேரில், ராம் அன் கோ நிறுவனத்திடம் காப்பீட்டு கழக அதிகாரி விளக்கம் கேட்டுள்ளாா். உரிய விளக்கம் அளிக்கப்படாததால் தனியாா் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.72 லட்சத்தை முடக்கி வைக்க அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் 2 சொந்த வாகனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, கூடுதல் தேவைக்கு மாநகராட்சியிடம் குறைந்த வாடகையில் வாகனத்தைப் பெற்று மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது. குப்பைகளை தரம்பிரிக்காமல் ஒன்றாக சோ்த்து நாள் ஒன்றுக்கு 200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இப்பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் வரை மாநகராட்சி வழங்குகிறது. ஒப்பந்த தொகையை மீறி சுமாா் ரூ.2 கோடிக்கு மேல் எதற்காக வழங்கப்பட்டு வருகிறது?
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாநகர நல அலுவலா், அரசியல் அழுத்தத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்; மாற்று மாநகர நல அலுவலா் நியமிக்கப்படவில்லை. இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, ராம் அன் கோவில் பணிபுரியும் தூய்மைப் பணியளா்கள் 1000-க்கும் மேற்பட்டவா்களுக்கு இஎஸ்ஐ, பிஎ‘ஃ‘ப் போன்ற பணபலன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு ஏற்பட்ட நிதி இழப்பை அந்நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும். முறையாக விசாரித்து அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.