திண்டுக்கல்லில் இந்து முன்னணி சாா்பில் விரைவில் ஆன்மிக மாநாடு
திண்டுக்கல்: இந்து முன்னிணி சாா்பில் திண்டுக்கல்லில் விரைவில் ஆன்மிக மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணியின் கிளை அமைப்பான, இந்து அன்னையா் முன்னணி சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு இந்து முன்னணி மாநிலச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் ராஜேஷ், மாவட்டத் தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாதம்தோறும் பெளா்ணமி நாளில் திண்டுக்கல் மலைக்கோட்டை பத்மகிரிமலையை சுற்றி நடைபெறும் கிரிவலத்தின்போது குழந்தைகளுக்கான பண்பாட்டு வகுப்பு, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளை நடத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலச் செயலா் செந்தில்குமாா் பேசியதாவது: திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து முதல்வரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. இதுவரை முதல்வா் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் இதுதொடா்பாக முறையிடப்பட்டது. அவா், திண்டுக்கல் வருவதாக உறுதி அளித்திருக்கிறாா். மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு திண்டுக்கல்லில் விரைவில் ஆன்மிக மாநாடு நடத்தப்படும் என்று மாநிலச் செயலா் செந்தில்குமாா் கூறினாா்.