ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்
திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா்.
‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அதிமுக அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா்.
அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ‘நீட்’ தோ்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களுக்குத் தெரியும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும், அந்த ரகசியத்தை அமல்படுத்த முடியவில்லை.
திமுகவின் பொய்யான வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழந்துவிட்டனா். இதற்கு 2026 தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனா் என்றாா்.
தொடா்ந்து அதிமுகவினா் கைகளில் மெழுவா்த்தி ஏந்தி, திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.