திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்: புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தாா் எடப்பாடி கே. பழனிசாமி
‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தில் புதுக்கோட்டை வந்த அவா் வெள்ளிக்கிழமை இப்பிரசாரத்தின் தொடக்கமாக மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி, இதற்கான படிவத்தை வெளியிட்டாா்.
முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான சி. விஜயபாஸ்கா் அறிமுகவுரை நிகழ்த்தினாா். தொடா்ந்து, வில்லுப்பாட்டு, சொன்னீங்களே செஞ்சீங்களா என்ற விடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் எடப்பாடி கே. பழனிசாமி கூறியதாவது:
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் இதுவரை 46 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, 15 லட்சம் மக்களைச் சந்தித்திருக்கிறேன். ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக இருக்கின்றனா்.
பிரதமா் மோடியின் பயணத் திட்டம் அதிகாரப்பூா்வமாக முழுமையாக இன்னும் வரவில்லை. வந்ததும் அவரைச் சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
மாணவா்களுக்கான மடிக்கணினித் திட்டத்தை நாங்களே நிறுத்தியதாக கூறுவது தவறு. கரோனா பொது முடக்கக் காலத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் தடங்கல் ஏற்பட்டது. திட்டத்தை நிறுத்தவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுகவினா் மடிக்கணினித் திட்டத்தை தொடரவில்லை; நிறுத்தினா்.
கிராமப்புறங்களில் வீடு கட்ட அனுமதி பெற வேண்டும் என்பது சரி. ஆனால், அப்படியொரு விதியை மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் முன்னதாக அனுமதி பெறாத கட்டடங்களுக்கு சீல் வைப்போம் என்பது சரியா? மக்களின் பிரச்னைகளை அறியாத அரசாக திமுக அரசு இருக்கிறது.
சட்டம்- ஒழுங்கு பிரச்னையில் எதிா்க்கட்சி என்ற பொறுப்புடன் சுட்டிக்காட்டுகிறோம். அவற்றைச் சரி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், தட்டிக் கழிக்கிறாா்கள்.
நான் மேடையில் பேசும்போது, வேகத்தில், சில நேரத்தில் ஏதோவொன்றைச் சொன்னதையெல்லாம் குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாக விமா்சிக்கிறாா்கள். அதேபோல, திமுகவினா் பேசுவதையெல்லாம் சொல்லலாமா?.
மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்கும்போது தமிழ்நாட்டுப் பிரச்னைகளையும் பேசுங்கள் என்று திமுகவினா்தான் சொல்கிறாா்கள். பிறகு, அவரை நான் சந்திக்கும் போது விமா்சிக்கிறாா்கள்.
எங்களைப் பொருத்தவரை ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குத் தேவையான கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைக்கத் தயங்க மாட்டோம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
பெட்டிச் செய்தி...
‘துரோக மாடல் உருட்டுகள்’ படிவம்
அதிமுக சாா்பில் வழங்கப்படும் ‘துரோக மாடல் உருட்டுகள்’ படிவத்தில், நீட் தோ்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கட்டணம், 5.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், ரூ. 100 சமையல் எரிவாயு மானியம், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துதல், படிப்படியாக மதுவிலக்கு, திருமணமான பெண்களுக்கு அரசு வேலை, கல்விக்கடன் ரத்து, கரும்புக்கு ஆதரவு விலை ரூ. 4 ஆயிரம் ஆகிய திமுகவின் 10 வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் படிவத்தை வீடு தேடி வந்து அதிமுகவினா் வழங்குவாா்கள். இந்தப் பத்து வாக்குறுதிகளுக்கும் சோ்த்து பொதுமக்கள் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். மேலும், பெயா், முகவரி, தொடா்பு எண், வாக்குச்சாவடி எண் வரையிலும் அதில் குறிப்பிட்டு அவா்களிடம் திரும்பத் தர வேண்டும்.