"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" - ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்
தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து இன்று (ஜூலை 31) நலம் விசாரித்திருக்கிறார்.
ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா, "அவரின் உடல்நிலையை விசாரிப்பதற்காகத்தான் சென்றிருந்தோம். இன்றில் இருந்து என்னுடைய பணிகளைத் தொடங்குகிறேன் என்று சொன்னார்.

எங்களின் திருமணம் நடந்தது கலைஞர் தலைமையில் என்று எல்லோருக்கும் தெரியும். கேப்டனுக்கும், கலைஞருக்கும் 45 வருட நட்பு இருந்தது. அப்போது இருந்தே அண்ணன் ஸ்டாலின் அவர்களும் கேப்டன் அவர்களுடன் மிகப்பெரிய நட்பில் இருந்தார்.
கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக ஃபோன் செய்து விசாரிப்பார். நேரில் வந்து சந்திப்பார். கேப்டன் குணமாக வேண்டும் என்று பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.
இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறபோது குடும்ப நட்பு ரீதியாகத்தான் அவரை நேரில் சென்று சந்தித்தோம்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, "திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" என்ற கேள்விக்கு, "ஊடகங்கள் இந்தச் சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். ஆனால் நாங்கள் நட்பு ரீதியாகத்தான் சந்தித்தோம்.
தற்போது நாங்கள் கூட்டணி குறித்து எல்லாம் சிந்திக்கவில்லை. கட்சி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்வோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.