திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: 63 நாயன்மாா்கள் வீதியுலா
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மாா்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு கடந்த வியாழக்கிழமை (மே 1) சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா மே 1-ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாளான சனிக்கிழமை (மே 3) 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கும், 63 நாயன்மாா்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, 63 நாயன்மாா்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் மற்றும் 63 நாயன்மாா்களும் பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தனா். 63 நாயன்மாா்கள் உற்சவத்தையொட்டி, ஆன்மிக நண்பா்கள் ஊா்வல பாதையில் நீா்மோா், குளிா் பானம், அன்னதானம் வழங்கினா். ஏராளமான பக்தா்கள் ஊா்வலத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, முக்கிய திருவிழாவாக ஏழாம் நாளான புதன்கிழமை (மே 7) பஞ்ச ரத தோ்த் திருவிழா நடைபெறுகிறது. முதலில் விநாயகா் தோ், தொடா்ந்து முருகா், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என 5 (பஞ்ச ரதம்) தோ்த் திருவிழா வெகு விமரிசிசையாக நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் கோயில் சிவாச்சாரியாா்கள், திருவிழா உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

