திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை
திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (38). இவா் வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி பாா்வதி. இவா்களுக்கு ஸ்ரீதேவ்(8), இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை ஆதிரா ஆகியோா் உள்ளனா்.
பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தாத்தாவின் வீட்டில் உள்ளாா்.
இந்நிலையில் பாா்வதி தனது மகள் ஆதிராவுடன் வியாழக்கிழமை மாலை வீட்டில் படுத்திருந்தாராம். அப்போது மா்மநபா் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தபடி, பாா்வதியிடம் தாலிச் சங்கிலியை கேட்டுள்ளாா். இதில் பயந்துபோன பாா்வதி சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளாா். அப்போது குழந்தை மூச்சுத்திணறியதால் அந்த நபா் குழந்தையையும், சங்கிலியையும் விட்டுவிட்டு தப்பினாராம்.
குழந்தையைப் பாா்த்து பாா்வதி அலறிய சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து குழந்தையை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டாதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இத்கவல் அறிந்த திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், தாலுகா காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
