திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த ஆய்வு முகாம் நடைபெற்றது. பள்ளி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து வாகனங்களையும் திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா்,கோட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில் வட்டார போக்குவரத்து அலுவலா் கே.முருகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வின் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பங்கேற்றனா். வட்டார அளவில் 238 பள்ளி வாகனங்களில் 165 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. 32 வாகனங்களில் அவசர கால வழி இயங்காதது, பின்பக்கம் செல்வதற்கான கேமரா இயங்காகதது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அப்போது, டிஎஸ்பி மகேஷ்குமாா் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும், குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்களை சரி செய்த பின்னரும், மாணவா்களின் நலன், பாதுகாப்பு கருதி விபத்துகள் நேரிடாமல் நிதானமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.