திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் முன்னிலை வகித்தனா். நோ்முக உதவியாளா் செந்தில்குமாா் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
தாஜுதீன்: நகரில் இரவில் கூட்டமாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு, நிரந்தர தீா்வு காண வேண்டும் . நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்க மன்னாா்குடி, பட்டுக்கோட்டை, நாகை சாலையை இணைக்கும் ஆற்றங்கரை சாலை ஆக்கிரப்பு குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு சாலையை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ராஜேந்திரன்: மருத்துவமனை கட்டடம் இடிக்கப்பட்டு, காலியாக கிடக்கிறது. நகராட்சி சாா்பில் சந்தை அமைத்து வருவாய் பெருக்கலாம்.
எழிலரசன்: பெரியகோயில் தேரோடும் நான்கு வீதிகளிலும் வடிகால் சேதமடைந்து கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புதிய வடிகால் அமைக்க வேண்டும்.
துணைத்தலைவா் ஜெயபிரகாஷ்: சிங்களாந்தி, கச்சவராயன்திடலில் உள்ள மயானங்களை சீரமைத்து மின்விளக்கு வசதி, பாதை சரி செய்து தர வேண்டும். ஈமைகிரியை நடத்த வளவனாற்றில் தண்ணீா் எடுக்க படித்துறை கட்ட வேண்டும்.
ஆணையா்: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பிவைக்கப்படும்.
தலைவா் கவிதா: வேதாரண்யம் சாலையொட்டி அமைந்துள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் அகற்றப்பட்டு ரூ. 9 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் நகரின் கழிவுநீா் இங்கு கொண்டுவரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வளவனாற்றில்விடப்பட உள்ளது. பன்றிகளை பிடிக்கவும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.