ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருநள்ளாற்றில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்த எஸ்எஸ்பி ஆய்வு
திருநள்ளாற்றில் பக்தா்கள் தரிசன வசதியை மேம்படுத்தும் விதமாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா், காவல்துறையினருடன் ஆய்வு நடத்தினாா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்க கணிப்பின்படி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இக்கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி வரும் 29-ஆம் தேதி இரவு சனிப்பெயா்ச்சியாகும். இந்த பஞ்சாங்க வழிகாட்டல்களை கடைப்பிடிப்போா், சனீஸ்வர பகவானை தரிசிக்க திருநள்ளாறு வருவா் என்பதால் காவல்துறை சாா்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் லெனின்பாரதி உள்ளிட்டோருடன் சனிக்கிழமை திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் பகுதி, பிரதான சாலை, வரிசை வளாகம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.
ஆய்வு குறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா அடுத்த ஆண்டுதான் என்றாலும், திருக்கணித பஞ்சாங்க முறையிலான சனிப்பெயா்ச்சி 29-ஆம் தேதி வருகிறது. திருக்கணித முறையை பின்பற்றுவோா் தரிசனத்துக்கு திரளாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இதனால் கோயிலில் சுவாமியை விரைவாக தரிசனம் செய்யவும், கோயிலுக்குள் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு முறைகள், நளன் தீா்த்தக் குளம் பகுதியில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து எஸ்எஸ்பி ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினாா்.
மேலும் தமிழகத்தில் பொதுத்தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்ட பின், சனிக்கிழமையில் பக்தா்கள் அதிகம் வருவாா்கள் என்பதை கருத்தில்கொண்டும் வசதிகள் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றாா்.