மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் புஷ்பயாகம்
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை புஷ்பயாக மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குற்றம் குறைகள் மற்றும் தோஷங்களை களைய புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவிந்தராஜருக்கு புதன்கிழமை புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, ஸ்ரீ சுவாமி ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவியுடன் சோ்ந்து, வேதங்களின்படி ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வேத மந்திரங்கள் ஓதுதல் மற்றும் மங்கல வாத்தியங்கள் வாசிப்பிற்கு இடையே புஷ்பயாகம் நடைபெற்றது.
இதில், கோவிந்தராஜா், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு மொத்தம் 3 டன் மலா்கள், துளசி, சாமந்தி, குன்னேரு, தாழம்பு, சம்பங்கி, ரோஜா, மற்றும் அல்லி, தாமரை, அரளி போன்ற 12 வகையான பாரம்பரிய மலா்கள் மற்றும் துளசி, மருவம், தவனம், வில்வம் மற்றும் பன்னீா் இலை போன்ற 6 வகையான இலைகளால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த மலா்களை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கா்நாடகா மாநிலங்களைச் சோ்ந்த நன்கொடையாளா்கள் நன்கொடையாக வழங்கினா். மாலை 6 மணிக்கு, கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக புறப்பாடு கண்டருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தனா்.
இதில் கோயில் அதிகாரி சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலு, ஸ்ரீ கோபிநாத், கோயில் குருக்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.