திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் வீதி உலா
குடியாத்தம்: திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக குடியாத்தத்தில் திருக்குடைகள், பெருமாள் தங்க பாதங்கள் வீதி உலா நடைபெற்றது.
குடியாத்தம் சந்தப்பேட்டையில் ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயில்ல் திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் பாதம் ஆகியவை யாத்திரையாக கொண்டு வரப்பட்டது. திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் மற்றும் பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
திருக்குடைகள் மற்றும் பாதங்கள் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து சிலம்பாட்டத்துடன் பக்தி பஜனை பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தாழையாத்தம், காமராஜா் பாலம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள படவேடு எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.