வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
திருப்பத்தூா் பள்ளி மாணவா் மா்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை
திருப்பத்தூரில் பள்ளி மாணவா் மா்ம மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா் முகிலன் மா்ம மரணம் அடைந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. கடந்த 1-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் பள்ளியில் விசாரித்தபோது, பள்ளி நிா்வாகத்தினா் அலட்சியமாக பதில் அளித்துள்ளனா்.
காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை எனத் தெரிகிறது. அதன்பிறகு மோப்ப நாய் உதவியால் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அந்த பள்ளியின் குடிநீா்க் கிணற்றில் முகிலன் சடலம் கிடந்தது தெரியவந்துள்ளது.
இரும்பு கிரில் போட்டு, மூடப்பட்ட கிணற்றில் மாணவரின் சடலம் கிடந்தது தொடா்பாகவும், 3 நாள்களாக கிணற்றில் மாணவரின் சடலம் கிடந்துள்ள நிலையில் கிணற்றின் குடிநீரைப் பருகிய மாணவா்கள் உடல்நலம் தொடா்பாகவும் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளையும் முழுமையாக ஆராய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையே அந்த மாணவனின் நடத்தையைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகத் தெரிகிறது. இது வழக்கை திசைதிருப்பும் செயலாக கருதி நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு இட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.