திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!
திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கோகுல் தாக்கல் செய்த மனு :
திருபுவனம் பேரூராட்சியில் புகழ் வாய்ந்த ஸ்ரீகம்பஹரேஸ்வா் கோயில் உள்ளது. கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், திருபுவனம் பேரூராட்சி வாா்டு எண் 10-இல்
1.43 கோடியில் கோயில் சந்நிதி பாதையில் பாதசாரிகள் நடைபாதை, மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திட்டப் பணிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒப்பந்ததாரா் நடைபாதையில் உள்ள மின் கம்பங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இவ்வாறு சாலைப் பணிகள் மேற்கொண்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி முறையாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திட்ட மதிப்பீட்டின்படி முறையாக சாலைப் பணிகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருபுவனம் பேரூராட்சியில் நடைபெறும் சாலை திட்டப் பணிகள் உரிய விதிகளை பின்பற்றி தரமாக சாலை அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.