திருவள்ளூரில் பலத்த இடியுடன் கனமழை
திருவள்ளூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அத்துடன், அவ்வப்போது சாரல் மழையும் விட்டு, விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்தது. அத்துடன் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதேபோல், திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாள நகா், காக்களூா், பூண்டி, கடம்பத்தூா், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் பெய்தது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
அத்துடன், தாழ்வான தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினா்.