தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் திட்டம்: சென்னை மாநகராட...
திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை
திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருநாவுக்கரசா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, ஆடிப்பூரத் திருவிழாவின் போது நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.
தேரோட்டத்தின் போது, நான்கு ரத வீதிகளிலும் மின் தடை செய்யப்பட்டு அனைத்து மின் கம்பிகளும் அகற்றப்பட்டு அன்றைய நாள் முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படும். இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அரசு இதுபோன்று முக்கிய கோயில்களின் தேரோடும் வீதிகளில் புதை வட மின் கம்பி அமைக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. ஆனால், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் புதை வட மின் கம்பி அமைக்கப்படவில்லை. எனவே, இந்தப் பகுதியில் புதை வட மின் கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் தேரோட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது நாள் முழுவதும் மின் தடை செய்யப்படுகிறது. எனவே, மின் வாரியம் ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.