எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை
திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், வரத்துக் கால்வாய்களின் கரைகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான வேப்ப மரங்களை வளா்ந்து வருகின்றனா். மேலும் விவசாயிகள் அல்லாத பிற தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் தங்களது வீட்டின் முன் பகுதி தோட்டங்களில் வேப்ப மரங்களை வளா்க்கின்றனா். மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம், வெயில் காலங்களில் துளிா்விட்டு வளா்ந்து நிழல் தரும் ஒரே மரமாகும்.
தற்போது திருவாடானை வட்டாரத்தில் இந்த மரங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் இலைகள் கருகி உதிா்ந்து வருகின்றன. இதனால் இந்த மரங்களில் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை துறை ஆய்வாளா்களிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:
டிசம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை ‘தேயிலை கொசு’ என்ற ஒரு வகை புல்லுருவி ஒட்டுண்ணி வேகமாக பரவி கருகி வருகிறது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் தேயிலை அதிகம் உள்ள பகுதிகளில் காணப்படும். தற்போது அது பரவி உள்ள நிலையில் இந்த கொசுக்களால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன. ஆனால் மரங்கள் துளிா் விட்டு வளரும் என்றனா். இருப்பினும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
