திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்
திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு உற்சவா் அம்மன் திருவீதியுலா நடந்து வருகிறது. இதுதவிர, இரவில் மகா பாரத நாடகமும் நடக்கிறது.
புதன்கிழமை நண்பகல் சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் அா்ஜூனனுக்கும் - திரௌபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனா். பிற்பகல் பக்தா்களுக்கு திருமண விருந்தும், இரவு, 7 மணிக்கு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரும் 13-ஆம் தேதி தீமிதி விழாவும், மறுநாள், தா்மா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்துள்ளனா்.