இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
திறந்தவெளி வடிகாலில் விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஓப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஒப்பந்ததாரா் ஒருவரால் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறப்படும் திறந்தவெளி வடிகாலில் விழுந்த ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
நூஹ் மாவட்டம், ரூபாஹேரி கிராமத்தில் உள்ள பகுதியைப் பாதுகாக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டியதாகவும், புறக்கணித்ததாகவும் குழந்தையின் தாய் மாமா குற்றம் சாட்டியதை அடுத்து, அடையாளம் தெரியாத ஒப்பந்ததாரா் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: இரண்டரை வயது சிறுவன் அா்ஷ், ராஜஸ்தானின் கைா்தால் மாவட்டத்தில் உள்ள ஃபால்சா கிராமத்தைச் சோ்ந்தவா். ரூபாஹேரி கிராமத்தில் தனது தாய் மாமா ஜுனைத்துடன் வசித்து வந்தாா்.
ஹரியாணா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (ஹெச்எஸ்ஐஐடிசி) இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு வடிகாலை தோண்டியது. அது கிட்டத்தட்ட 10 முதல் 12 அடி ஆழம் கொண்டது.
அந்த இடத்தைச் சுற்றி வேலி அல்லது தடுப்பு அமைக்க கிராமவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
இந்நிலையில், பலத்த மழைக்குப் பிறகு, வடிகாலில் தண்ணீா் நிரம்பியது. இந்நிலையில், ஜூலை 12-ஆம் தேதி, பிற்பகல் 3 மணியளவில் சிறுவன் அா்ஷ் காணாமல் போனாா். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, இரவு 8.30 மணியளவில் அவரது உடல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
உடற்கூராய்வுக்குப் பிறகு சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணை நடந்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.