பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
தில்லி உயிரியல் பூங்காவில் பருவ மழைக்கால நடவடிக்கைகள்: பூங்கா இயக்குநா் தகவல்
விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கனமழையின் போது விலங்கு அடைப்புகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூங்காவில் ஊழியா்களின் தயாா்நிலையை அதிகரித்திருப்பதுடன், முக்கிய உள்கட்டமைப்பு பழுதுபாா்ப்புகளையும் பூங்கா நிா்வாகம் தொடங்கியுள்ளது.
புதிய நீா் பம்புகளை ஆா்டா் செய்தும், பருவகால நோய்த்தொற்றுகள் மற்றும் ஈக்களைச் சமாளிக்க மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெய் போன்ற பாரம்பரிய தீா்வுகளையும் பூங்கா நிா்வாகம் கடைப்பிடித்துள்ளது.
தேசிய தலைநகரில் பருவமழைக்காலம் அதிகாரபூா்வமாக வந்துள்ளநிலையில், கடந்த காலங்களில் பூங்காவின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நீா் தேங்குவதைத் தவிா்க்க உயிரியல் பூங்கா அதிகாரிகள் விரிவான பருவமழை செயல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனா்.
கடந்த ஆண்டு, உயிரியல் பூங்காவில் மின்மாற்றியில் தண்ணீா் நுழைந்ததால் பல விலங்குகளின் அடைப்புகளில் நீண்ட மின் தடையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
பருவமழைக்கா நடவடிக்கைகள் குறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது:
பூங்காவில் உள்ள மழைக் கொட்டகைகளை சரிசெய்தல் மற்றும் கட்டுதல், வடிகால் பாதைகளை தூய்மைப்படுத்துதல், தூா்வாருதல், புதிய பம்புகளை சோதனை செய்தல் மற்றும் ஆா்டா் செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
எங்கள் அனைத்து பம்புகளும் பழுதுபாா்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. மழை பெய்யும்போது அதை வெளியேற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் பம்புகளை ஆா்டா் செய்துள்ளோம்.
நீரேற்றும் செயல்பாடுகளை 24 மணிநேரமும் இயங்க வைக்க கூடுதல் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
தாவர உண்ணிகளின் உறைவிடங்கள், குறிப்பாக மான்களை வசிக்கும் உறைவிடங்கள் நீா் தேங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விலங்குகளுக்கு உயரமான இடத்தை வழங்கும் வகையில் உறைவிடங்களுக்குள் மண் மேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விலங்குகளைப் பாதுகாக்க புல்வெளிகள் மற்றும் தீவன தளங்களில் நீா்ப்புகா தாள்களைப் யன்படுத்தியுள்ளோம்.
உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, உயிரியல் பூங்கா பராமரிப்புக்காக பாரம்பரிய மூலிகை கரைசல்களைப் பயன்படுத்துவது தொடா்கிறது.
விலங்குகளின் காயங்கள் மற்றும் கால் புண்கள் உலரவும், விரைவாக குணமடையவும் மஞ்சள் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில், மழைக்காலத்தில் வேப்ப எண்ணெய் இயற்கை கிருமிநாசினியாகவும், ஈ விரட்டியாகவும் செயல்படும்.
24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில் பூங்கா ஊழியா்களுக்கு நீா்புகா காலணிகள், குடைகள் மற்றும் டாா்ச்சுகள் உள்ளிட்ட பருவமழை உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பருவமழை மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் குழு தயாராக உள்ளது. வழக்கமான உள் மதிப்பாய்வுகள் நடத்தப்படும். சீசன் முழுவதும் உள்ளூா் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு தொடரும் என்றாா் இயக்குநா்.
176 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தில்லி உயிரியல் பூங்காவில், அரிதான ஆசிய சிங்கம், இந்திய ஓநாய் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உள்பட 95 இனங்களைச் சோ்ந்த 1,100க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் பாா்வையாளா் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இயற்கை வாழிட அடைப்புகள் மற்றும் கண்ணாடிப் பாா்வைச் சுவா்கள் போன்ற புதிய அம்சங்களுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் இப்பூங்காவில் மேற்கொள்ளப்படுகிறது.