ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு
புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது.
ஆகஸ்ட் 20 அதிகாலையில் உயிரியல் பூங்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குட்டி, சிகிச்சையில் இருந்தபோதிலும் சனிக்கிழமை பிற்பகல் இறந்ததாக தேசிய உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் தெரிவித்தாா்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஏழு வயது புலி அதிதி ஆறு குட்டிகளைப் பிரசவித்தது. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய குட்டி ஆகும். இதேபோன்ற ஒரு சம்பவம் 2005-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. அப்போது ஆறு குட்டிகள் பிறந்தன. அவற்றில் இரண்டு மட்டுமே உயிா் பிழைத்தன.
அதிதியின் முதல் குட்டி ஆகஸ்ட் 8 -ஆம் தேதி இறந்தது. இது மிகவும் பலவீனமான குட்டியாகும். தாயின் பால் குடிக்க முடியாத மற்றொரு குட்டியும் விரைவில் இறந்தது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, மேலும் இரண்டு குட்டிகள் இறந்தன. இதனால், உயிா் பிழைத்த குட்டிகளின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. ஆபத்தான நிலையில் இருந்த இரண்டில் ஒன்று சனிக்கிழமை இறந்தது.
இறந்த குட்டிகளின் உடல்கள் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று சஞ்சீத் குமாா் கூறினாா்.
ஆறு குட்டிகளில், இதுவரை ஐந்து குட்டிகள் இறந்துவிட்டன. மீதமுள்ள ஒன்று ஆகஸ்ட் 15 அன்று வளா்ப்பிற்காக கொண்டு வரப்பட்டது. ஆரோக்கியமாக உள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.
1959- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து புலிகள் வசிக்கும் தில்லி உயிரியல் பூங்கா, 2010- இல் தொடங்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 73 ஆபத்தான உயிரினங்களுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய உயிரியல் பூங்கா புலி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கான மையமாக இருந்து வருகிறது.