தில்லி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு!
தில்லி மேயராக பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்ததால் பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டது.
இதில், 142 வாக்குகளில் 133 வாக்குகளைப் பெற்ற பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் ஒரு மனதாக மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் 8 வாக்குகளைப் பெற்றது. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் பாஜக கைப்பற்றியுள்ளது.
பல கவுன்சிலர்கள் பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தில்லி மாநகராட்சியில் கவுன்சிலர்களின் பலம் 250-லிருந்து 238 ஆகக் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 104 ஆக இருந்த பாஜக கவுன்சிலர்களின் எண்ணிக்கை இப்போது 117 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை 134 லிருந்து 113 ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் எட்டு இடங்களுடன் உள்ளது.
இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தோருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
வெற்றிக்குப் பிறகு, ராஜா இக்பால் சிங் மூத்த பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தில்லியின் வளர்ச்சிக்கு பாரபட்சமின்றி செயல்படுவதாக உறுதியளித்தார்.
இதுபற்றி ராஜா இக்பால் கூறுகையில், “பிரதமர் நரேந்தி மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பிற கட்சித் தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காக எந்த பாகுபாடும் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிக்க:அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!