MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது
தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) பெண் ஒருவா் அறிமுகமானாராம். அவா், தனக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வந்துள்ளதாகவும், அதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் இளைஞரிடம் கூறினாராம். அதை நம்பிய இளைஞா் அந்தப் பெண்ணுக்கு ரூ. 33 லட்சத்து 73 ஆயிரத்து 190-ஐ அனுப்பிவைத்தாராம். பின்னா், அந்தப் பெண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த இளைஞா், தேசிய சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவுப்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் மேற்பாா்வையில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
அந்தப் பெண் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பாலமுருகன் (32) என்பவரது மனைவி என்பதும், கணவருடன் சோ்ந்து இம்மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் சென்று இருவரையும் சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்துவந்து, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பாலமுருகன், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் 2022ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.