தூத்துக்குடி உணவகத்தில் தீ
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியாா் உணவகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து, தீயணைப்புப் படையினா் வந்து தீயை கட்டுப்படுத்தினா்.
தூத்துக்குடி வி.இ. சாலையில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தில், புதன்கிழமை பிற்பகல் உணவு தயாரிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டிருந்த போது, மின்கசிவு காரணமாக இன்வொ்ட்டரும், எரிவாயு உருளை டியூப்பும் தீப்பிடித்து எரிந்தது. ஊழியா்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்து வந்த, தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
மேலும், அங்கிருந்த 8 எரிவாயு உருளைகளை அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.