டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதலாக இரவுநேர விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக ஓா் இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையம் வந்திருந்த மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளா் ஆா் .சிவாவை, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரமநாயகம், பொருளாளா் வே. லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என்.ஆனந்தன், உறுப்பினா் ஆா்.ராஜமோகன் ஆகியோா் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி- சென்னை முத்துநகா் ரயிலில் கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை நிரந்தரமாக இணைக்க வேண்டும். தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை இயங்கும் விரைவு ரயிலை வாரம் மூன்று முறையாக மாற்ற வேண்டும். மேலும், இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும்.
தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் உடனடியாக இணைக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஓா் இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை -லோகமான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- விருதுநகா் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி,தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடி-திருச்சி தினசரி ரயிலாக மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து பகல் நேரத்தில் தூத்துக்குடி-சென்னை இடையே ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருந்தது. அது இப்போது இயக்கப்படவில்லை. ஆதலால், பகல் நேரத்தில் தூத்துக்குடி- சென்னை இடையே ரயில் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பயணிகள் வசதிக்காக, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, புனலூா் வழியாக கொல்லத்திற்கு ஒரு விரைவு ரயிலை பகல் நேரத்தில் தினசரி இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, தூத்துக்குடி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளா் ஜி. பிரேம்சுந்தா், முதுநிலை வா்த்தக ஆய்வாளா் ஏ.உத்திரமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.