Ambikapathy Rerelease: "அது எப்படி க்ளைமேக்ஸை மாற்றலாம்?" - AI Climax குறித்து ஆனந்த் எல் ராய்
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அம்பிகாபதி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகமெங்கும் ரீ-ரிலீஸாகிறது.
எப்போதுமே ரீ-ரிலீஸில் படத்தைத் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கேற்ப மெருகேற்றுவார்கள்.
பழைய திரைப்படங்களை இப்போது பார்க்கும்போதுகூட பார்வையாளர்களுக்கு அவைப் பிடித்தமானதாக இருக்க வேண்டும் எனக் காட்சிகளைக் கத்தரிப்பது வழக்கமாக ரீ-ரிலீஸில் நடந்திருக்கிறது.

ஆனால், 'அம்பிகாபதி' திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதன் க்ளைமேக்ஸ் காட்சிகளையே மாற்றுவதற்குப் படத்தின் எராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்போது மாற்றுவதில் இயக்குநர் ஆனந்த் எல். ராய்க்கு உடன்பாடில்லை.
சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் 'அம்பிகாபதி' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றுவது பற்றிய அவரின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் பேசுகையில், "பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற ஒரு மாற்றத்திற்கு நடிகர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.
இப்போது, இயந்திரங்கள் திரைப்படங்களை உருவாக்கும் என நம்புகிறார்கள். நாளை, யாராவது ஒருவர், ஒரு திரைப்படத்தைச் சட்டப்படி மாற்றலாம் அல்லது பார்வையாளர்களுக்குச் செல்வதற்கு முன்பே அதைத் திரிபு செய்யலாம் என்று சொன்னால், என்ன ஆகும்?
ஐபி (IP - Intellectual Property Act) சட்டப்படி 'அம்பிகாபதி' திரைப்படம் முழுமையாக அவர்களுக்குச் சொந்தமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

அவர்கள் அதை வெளியிடலாம், அதிலிருந்து அதிகப் பணம் சம்பாதிக்கலாம். அதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், ஏன் திரிபு செய்ய வேண்டும்?
கதையையும் அதன் மனநிலையையும் மாற்ற முடியாது. இப்படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிய ஒரு நடிகருக்கு, அந்தக் கதாபாத்திரம் இறுதியில் இறந்துவிடும் என்பது தெரியும்.
அவர் தனது திறமையைக் கடைசிக் காட்சிக்கு மட்டுமல்ல, முழு திரைப்படத்திற்கும் கொடுத்தார். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் முழுமையான பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார்.
எப்படி அதன் முடிவை வெறுமனே மாற்றி, வேறு ஏதோவொரு வடிவில் காட்ட முடியும்? இப்படியான விஷயங்கள் மீண்டும் நமக்கு நடக்கலாம். இதைச் சரி செய்வோம்.
நான் என் குரலை உயர்த்தி, எல்லோரையும் எச்சரிக்கையாக இருக்கச் செய்வேன். எதிர்காலத்தில், இயக்குநர்கள் அல்லது எழுத்தாளர்கள் படத்தின் முடிவுகளை வெறுமனே மாற்றக் கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைக்க வேண்டும்.

AI, VFX அல்லது அப்போதைய தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்திச் செய்யப்படும் எந்த மாற்றமும், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கப்படக் கூடாது.
எராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் பணம் சம்பாதித்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.
ஆனால், அதே ஐ.பி-யை மாற்றாமல் பணம் சம்பாதித்தால் நான் இன்னும் மகிழ்ச்சியடைவேன்" எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...