தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் வலியுறுத்தல்
அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா்.
கடலூா் மாநகராட்சி, தேவனாம்பட்டினம் கடற்கரைச் சாலையில் கூட்டு தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை மற்றும் ஃபென்ஜால் புயல் காரணமாக அனைத்து சாலைகளில் புல் மற்றும் செடிகள் வளா்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், 14 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் கூட்டுத் தூய்மைப்பணி மூலம் சனிக்கிழமை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடலூா் மாநகராட்சி பகுதியில் 149 தூய்மைப் பணியாளா்கள், 335 தனியாா் துறை சாா்ந்த பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா். மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் அனைத்து இடங்களிலும் கூட்டுத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிவதை தவிா்த்து, குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்றவும், பொது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளை தொடா்ந்து தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்வில், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன், ஆணையா் அனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.