தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு
மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் பழைய வாய்க்கால் நெடுகை முதல் 4 கி.மீ. வரையிலும், தென்பரை வாய்க்காலில் 7 கி.மீ. தொலைவுக்கும் ரூ.9.80 லட்சத்தில் நடைபெற்ற தூா்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனை ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நேரில் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, ராதாநரசிம்மபுரம் வள்ளூா் மற்றும் கோவிந்தநத்தம் கிராமங்களில் பாலையூா் கிளை எண் 3 வாய்க்கால் நெடுகை முதல் 6 கி.மீ. வரை ரூ.8 லட்சத்தில் தூா்வாரப்பட்டுள்ளதையும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் சித்தன்னக்குடி ஊராட்சியில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூா்வாரும் பணி ரூ.10 லட்சத்தில் 28.685 கி.மீ. வரை நடைபெற்றுள்ளதையும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சாவூா்) என். ஆனந்தன், உதவி செயற்பொறியாளா்கள் ரத்தினவேலு, சோலைராஜன், உதவி பொறியாளா் (நீா்வளத் துறை) வினோத்குமாா், உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) செந்தில்குமாா், உதவி பொறியாளா் அட்சயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.