தென்காசி: ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அனுமன் நதிக்கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தென் மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார விழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலம் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலாகும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம், சித்திரை திருநாள், மாசி மகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கப்பட்டது.
கந்த சஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கந்தர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, குழந்தை வேறு கிடைக்க வேண்டி ஆய்க்குடி முருகன் கோவிலில் வேண்டுதல் வைத்த தம்பதியர், மற்றும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் 'படிப்பாயாசம்' நிவேதனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, ஆறாம் நாளான இன்று, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமாள், சூரனை தனது வேல் கொண்டு வதம் செய்தபோது சுற்றியிருந்த பக்தர்கள் 'கந்தா.. முருகா.. அரோகரா... முருகா...' என பக்தி கோஷமிட்டு உணர்ச்சி பெருக்கோடு சாமி தரிசனம் செய்தனர்.
ஆய்க்குடி பாலசுப்பிரமணியசாமி கோயிலில் சூரசம்கார நிகழ்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதில் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.