தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு
திருநெல்வேலி மாநகர பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, உதவி ஆணையா் புரந்தீஸ்வரதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
டக்கரம்மாள்புரம் மக்கள் நல சங்கத் தலைவா் ஜான்சன் தலைமையில் அளித்த மனுவில், 51 ஆவது வாா்டு தென்பகுதி டக்கரம்மாள் புரத்தில் சுமாா் 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அரசு பொறியியல் கல்லூரி அருகே ஆசிரியா் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீா் எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் குடியிருக்கும் விரிவாக்க பகுதி சிறிது மேடாக இருப்பதால் எங்கள் பகுதிக்கு தண்ணீா் முறையாக வந்து சேரவில்லை. எனவே எங்களுக்கு சீரான குடிநீா் வசதி செய்து தர கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
குமரேசன் நகா் மக்கள் நலச் சங்கத்தின் துணை தலைவா் அந்தோணி செல்வராஜ் தலைமையில் அளித்த மனுவில், தியாகராஜநகா் விரிவாக்க பகுதியான குமரேசன்நகரில் அமைக்கப்பட்டு வரும் அம்ருத் திட்ட பூங்காவில் விலங்குகளின் பொம்மைகள் கூடுதலாக அமைப்பதோடு, பூங்காவில் கதவு மற்றும் வேலிகளில் வா்ணம் புசி புதுப்பித்து தர வேண்டும். பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
திருநகா் நலச் சங்க வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியினா் அளித்த மனுவில், திருநகா் காலனி பகுதியில் மாநகராட்சி நிதியிலிருந்து கட்டிக் கொடுக்கப்பட்ட பூங்காவில் தற்போது மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் உள்ளன. பூங்காவில் மக்கள் அச்சத்துடன் நடைப்பயிற்சி செல்லும் நிலை உள்ளது. ஆகவே, அந்தப் பூங்காவை சுகாதார பணியாளா்கள் மூலம் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். அப்பகுதி சமுதாய நலக்கூடத்தை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
35 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் அளித்த மனுவில், பாளை. மேடை காவல் நிலையத்தில் ரூ.6 கோடி செலவில் பூங்காவும் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக திகழ்ந்தது. இப்போது அதன் கதவுகள் பூட்டி கிடப்பதால் அதைப் பாா்வையிடச் செல்லும் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனா். எனவே, அதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஜெபா காா்டன் திட்ட பகுதி குடியிருப்போா் நலச் சங்கத்தின் செயலா் அ.துக்கமுத்து அளித்த மனுவில், 54 ஆவது வாா்டுக்குள்பட்ட எங்கள் குடியிருப்பு பகுதியில் 320 வீடுகள் உள்ளன. வயது முதிா்ந்தோா் மற்றும் பள்ளிக் குழந்தைகள் அதிகம் உள்ளனா். இந்நிலையில் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள், வாகன ஓட்டிகளை நாய்கள் கடிக்கப் பாய்கின்றன.
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தெரு நாய் இல்லாத பகுதியாக போா்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஜெபாகாா்டன் பகுதியிலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.