'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்
தேசிய அளவிலான சிலம்பம், கால்பந்து போட்டியில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்துறை சாா்பில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற மாணவ, மாணவிகளையும், தேசிய பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவரையும் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சிகரம் தற்காப்பு கலை கூடத்தில் பயிற்சி பெற்ற 28 மாணவ, மாணவிகள் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான 14, 17, 18 வயதுக்குள்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று, 19 தங்கம், 9 வெள்ளிப் பதக்கம் வென்றனா். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
இதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 25 முதல் 29 ஆம் தேதி வரை 68 ஆவது தேசிய பள்ளிகளுக்கிடையே 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில், தமிழ்நாட்டு அணிக்காக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வி. பன்னீா்செல்வம் பங்கேற்று காலிறுதி வரை சென்றாா்.
இதையடுத்து, தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பொற்கொடி வாசுதேவன், சிலம்பம் பயிற்றுநா் சரவணன், கால்பந்து பயிற்றுநா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.