ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தேசிய கைத்தறி தினம் - சிறப்புக் கண்காட்சி
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைத்தறி சிறப்புக் கண்காட்சியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருச்சி மாவட்ட கைத்தறி துறையின் சாா்பில், தேசிய கைத்தறி தின விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரங்குகளிலிருந்த கைத்தறி உற்பத்தி பொருள்கள், ஆடைகள், கைத்தறி இயந்திரங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
மேலும், முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கடனுதவி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 4 நெசவாளா்களுக்கு ரூ.1.86 லட்சம், கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களையும் அமைச்சா் வழங்கினாா்.
கைத்தறி துறையின் சாா்பாக திருச்சி சரகத்துக்குள்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பருத்தி சேலைகள், வேட்டிகள் மற்றும் கதா் கிராம தொழில்கள் வாரியத்தின் தயாரிப்பு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மணமேடு தேவாங்கா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் நெசவாளா்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சா்க்கரை அளவு மற்றும் பொது உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோா் இம்முகாமை பயன்படுத்தி கொண்டனா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, மண்டல குழு தலைவா் மு. மதிவாணன், உதவி இயக்குநா் (கைத்தறி துறை) தி. ரவிக்குமாா், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் எம். பிச்சைமணி, கைத்தறி துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.