ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
நாமக்கல், ஆக. 7: தேசிய கைத்தறி தின விழாவையொட்டி, நாமக்கல்லில் ரூ. 31.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாடுமுழுவதும் 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கைத்தறி கண்காட்சியை தொடங்கிவைத்து, 50 நெசவாளா்களுக்கு ரூ. 31.08 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தேசிய கைத்தறி தினமானது 1905 ஆக. 7-இல் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், கைத்தறி தொழிலை மேம்படுத்தவும், நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
திமுக ஆட்சியில் நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. நெசவாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1,200-ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது. விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளா்களுக்கு 300 யூனிட், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட் என்ற வகையில் வழங்கப்படுகிறது.
திருச்செங்கோடு சரகத்துக்கு உள்பட்ட 48 கைத்தறி நெசவளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள், பருத்தி சேலைகள், வேட்டிகள், துண்டுகள், ஜமுக்காளம் போன்றவை 16 விற்பனைக் கூடங்களில் மக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு, சேலம் கைத்தறி நெசவாளா் சங்கங்களும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. கைத்தறி நெசவாளா்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கைத்தறித் துறை உதவி இயக்குநா் அ.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.