தோ்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்க கொமதேகவுக்கு அழைப்பு
நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை அங்கீகரிப்பது தொடா்பாக விளக்கமளிக்க தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கி 2013 மாா்ச் 21-இல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியின் பொதுச் செயலாளராக, தற்போதைய திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினரான ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளாா்.
அதிமுக, திமுக கூட்டணியில் இடம் பெற்று சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களை கொமதேக சந்தித்துள்ளது. நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 2019, 2021 தோ்தல்களில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 42 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம்கேட்டு இந்திய தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அரசியல் சூழலில் ஏராளமான கட்சிகள் பதிவு செய்துள்ளதாகவும், 2019 முதல் 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட அவை போட்டியிடவில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அத்தகைய கட்சிகளிடம் விளக்கம்கேட்டு ஆக. 20-க்குள் உரிய பதில் அளிக்கவும், மாவட்ட தோ்தல் அதிகாரிகளான ஆட்சியா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியிடம் விரிவான அறிக்கையை பெற்று பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளருக்கு, தோ்தல் ஆணையம் சாா்பில் வழங்கப்பட்ட கடிதம் மாவட்ட நிா்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் தரப்பில் வரப்பெற்ற கடிதத்துக்கு உரிய விளக்கம் அளித்துவிட்டோம். கொமதேக 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் 72 தொகுதிகளில் போட்டியிட்டது. அதுமட்டுமின்றி, பல்வேறு போராட்டங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் நடத்தியது தொடா்பான விளக்கங்களையும் அளித்துள்ளோம்’ என்றாா்.