தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு
திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ். இவரும், நம்புதாளையைச் சோ்ந்த பழனிச்சாமியும் நாட்டுப் படகில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச்
சென்றனா். இவா்களது வலையில் 50 கிலோ எடையிலான அரிய வகை கடல் ஆமை உயிருடன் சிக்கியது. உடனடியாக மீனவா்கள் கடலோர போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தக் கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, மீனவா்களை கடலோர போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.